ஆசீவகத் தத்துவங்கள்

மக்கள் வழக்காற்றில் ஆசீவகம்

பன்னெடுங்காலமாய் பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் தமிழ் இலக்கியங்களை கற்று வருகிறோம்.சமணர்கள் அளித்த கொடை என்றே எனது தமிழாசிரியர்களும் பல செய்யுட்களை நடத்தியது எனக்கு நியாபகம் இருக்கிறது.சமணர்கள் அவ்வளவு அறிவாளிகளா.?- எனில் அவர்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற கேள்விக்கு பலரின் (ஆய்வாளர்கள் உட்பட) விடை ஜெயினர்கள் என்றே இருக்கிறது.


ஆம்,மகாவீரரின் ஜெயினத்தையே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.எனில் மகாவீரரின் இருப்பிடமாக எது உள்ளது என்று பார்த்தால்,அது வட மாநிலமாக இருக்கிறது. வடமொழியைக் கொண்டவர்கள் எப்படி தமிழில் இப்படிப்பட்ட அரிய இலக்கியங்களைப் படைத்தார்கள் என்று யோசிக்கையில்தான் மனம் அதை ஒரு புதிராகப் பார்க்கச்சொன்னது. சரி அவர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா என்றால் பழந்தமிழ் இலக்கியங்களில் பெளத்தமும் கூட காற்றாக வீசிக்கொண்டிருந்தது.அதன் மூலம் தான் என்ன என்று சிந்திக்கையில், அவர்களும் வடமொழியை அடிப்படையாகக் கொண்ட வடமாநில சமயத்தவரே என்று விளங்கியது.


பாளி,பிராகிருதம்,சம்ஸ்கிருதம் போன்ற வடமொழிகளைத் தங்கள் மூலமாகக் கொண்டவர்கள்,நாடோடிகளாகத் திகழ்ந்தவர்கள் எப்படி தமிழ் இலக்கியங்களையும், அதன் இலக்கணங்களையும் படைத்திருக்க முடியும் என்ற தேடலே என்னை இங்கு கொண்டுவந்திருக்கிறது.ஆம்,சிந்தனை மரபுகளாக இந்திய மெய்யியல் வரலாற்றில் ஜெயினமும்,பெளத்தமுமட்டுமல்ல அதற்கும் முன்னரே வேர்விட்டு,விழுதுவிட்ட கோட்பாடுகள் இங்கு அதிகம்.


"பெளத்தம் தோன்றுவதற்கு முன்பே இங்கு 62 சங்கங்கள் செழித்து இருந்தன " - என்று கூறும் இந்திய சிந்தனை மரபியல் ஆய்வாளர் டி.தருமானந்த கோசாம்பியின் குறிப்பைக்கொண்டு அதை உணரலாம்.அதைப்போல மெய்யியல் மரபாய் தமிழகத்தில் விளங்கியவை (வரிசை வாரியாக)
  • சாருவாகம் (உலகாய்தம்)
  • ஆசீவகம்
  • ஜெயினம்
  • பெளத்தம்

அதில் முக்கியமாய் தமிழகத்தில் தொடங்கி,வேர்விட்டு ; வடஇந்தியா மேலும் உலகெங்கும் பரவியது உலகாய்தம் மற்றும் ஆசீவகமே.

உலகமே தத்துவங்களால் தான் இயங்குகிறது.அப்படி இருக்கையில் சங்க காலத் தமிழர்கள் எந்த தத்துவத்தால் இயங்கினார்கள் ஜைனமும், பௌத்தமும் வடஇந்திய தத்துவங்கள் என்றால் தமிழர் தத்துவம் தான் என்ன ?

"அறிவின் ஊற்று ஆசீவகம்
  தத்துவங்களின் தலை ஆசீவகம்
  கோட்பாடுகளின் கோன் ஆசீவகம்"

- ஆம் மக்கள் வாழ்வினின்று என்றும் பிரிக்கமுடியாதது ஆசீவகமும்,அதன் எச்சங்களும்